ஈரோடு:இந்து முன்னணி சார்பில் சென்னிமலைசுப்பிரமணிய சுவாமி கோயில் இருந்து பனிமலை கோயில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர் ரஞ்சித் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இது குறித்து நடிகர் ரஞ்சித பேசுகையில் “ சென்னி மலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. சென்னி மலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.
ஆங்கில புத்தாண்டு ஒன்றும் நமது கலாச்சாரம் இல்லை அதற்காகப் புத்தாண்டை எதிர்க்கவில்லை. இந்த புத்தாண்டினை சென்னி மலை முருகன் கோயிலில் தொடங்கியுள்ளோம். 2024 ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடர் இல்லாத புதிய ஆண்டாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதிகள் தான். அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசமாக வரவேற்க வேண்டும்.