தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2023, 7:24 PM IST

ETV Bharat / state

சுற்றுலா சென்ற இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம் - லாரி மோதியதில் இருவர் பலி!

அம்மாபேட்டை அருகே கன்டெய்னர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் உயிரிழப்பு
கண்டெய்னர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் உயிரிழப்பு

ஈரோடு: திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, வளையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் கருப்புசாமி (வயது 23). பிபிஏ படித்த இவர் அவரது ஊரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் ராமர் (வயது 19). இவர் எலக்ட்ரீசனாக வேலை செய்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் தங்களின் உறவினர்களான சுப்பிரமணி மகன் கருப்புசாமி (வயது 20), ஆறுமுகம் மகன் அன்பரசு (வயது 19), பழனிசாமி மகன் பிரசாந்த் (வயது 19), கருப்புசாமி மகன் கவியரசு (வயது 19) ஆகியோருடன் 3 பைக்குகளில் நேற்று (ஜூன் 23) அதிகாலை ஒகேனக்கல் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், மேட்டூர் அணை பூங்காவுக்குச் சென்ற இவர்கள் மாலையில் திருப்பூருக்கு புறப்பட்டனர். 3 பைக்குகளில் நண்பர்கள் ஆறு பேரும் சென்ற நிலையில், ஒரு பைக்கில் கருப்புசாமி மற்றும் ராமர் சென்றுள்ளனர். அப்போது, மேட்டூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் சின்னப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது, மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற பஸ்ஸுக்கு பின்னால் கருப்புசாமி, ராமர் பைக்கில் வந்துள்ளனர்.

அந்த ரோட்டில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பஸ் ஓட்டுநர் பஸ்ஸை நிறுத்தியுள்ளார். இதனால் பஸ் பின்னால் வந்து கொண்டிருந்த கருப்புசாமி, ராமர் இருவரும் பைக்கை நிறுத்தினர். அப்போது, அதே வழித்தடத்தில் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதிவிட்டு, பஸ்ஸின் பின்பகுதியில் மோதி நின்றது.

கன்டெய்னர் லாரி மோதிய வேகத்தில், பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் பஸ்ஸுக்கும், லாரிக்கும் இடையில் சிக்கிக் கொண்ட கருப்புசாமியும், ராமரும் பலத்த காயமடைந்தனர். லாரி மோதிய வேகத்தில் பஸ் பள்ளத்தில் இறங்கியதில், பயணிகள் சிலரும் காயமடைந்தனர்.

இதையடுத்து இருவரையும் மீட்ட அப்பகுதியினர், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதனையில் கருப்புசாமி, ராமர் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அஜாக்கிரதையாக லாரியை ஓட்டிச் சென்ற வாழப்பாடியைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (வயது 48) என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞர்களில் இருவர், எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அந்த விபத்துகளில் உயிரிழக்கும் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும். வேகம் காரணமாக, போதை காரணமாக எத்தனையோ விபத்துக்கள் அரங்கேறும் நிலையில், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சம்பவம் சாலை குறித்த பயத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க:விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி - வங்கி உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details