ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்கு அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதுமாக தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஓராண்டாக தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை விவசாயத் தோட்டத்தில், புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
அதேபோல விவசாயத்தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியைச்சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியைச் சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும்; அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது. கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாயத்தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களைச் சேதம் செய்வது யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையைப் பிடிக்க வந்த முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் கடந்த ஜனவரி 12-ம் தேதி தாளவாடி வந்தன. "ஆப்ரேசன் கருப்பு" என்ற பெயரில் தொடர்ந்து 3 நாள்களாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மரியபுரம், சூசைபுரம், இரிபுரம் பகுதியில் நடமாடிய கருப்பனை பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால், கருப்பன் யானை வனத்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பியது. 16 நாள்களாக தாளவாடி திகினாரை முகாமில் தங்கியிருந்த 3 கும்கிகளின் பாகன்கள் தாய்லாந்து பயிற்சிக்கு செல்ல உள்ளதால், 3 கும்கிகள் மீண்டும் அந்தந்த முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து மீண்டும் கருப்பன் யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. ஆகையால், கருப்பனை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் ஜீரஹள்ளி வனச்சரகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குலா மீனா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருப்பன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக கருப்பன் யானை கரும்புத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. தாளவாடி வனச்சரகத்திக்கு உப்பட்ட கும்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு (52). இவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று முன் தினம் இரவு கருப்பன் யானை 8 மணியளவில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.