ஈரோடு:ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவர், தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் மனோஜ் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இரட்டையர்களான இருவரும் தாய், தந்தையுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தங்களது உறவினர்களுடன் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் கரையை நிறைத்துக் கொண்டு தண்ணீர் செல்வதால் தண்ணீர் வேகமாக செல்லும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மனோஜ் நீச்சலடித்தபடி தண்ணீர் வேகமாக செல்லும் பகுதிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இழுத்துச் செல்லப்பட்டார்.
தனது கண் முன்னே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தம்பியை காப்பாற்ற கோகுலும் தண்ணீர் வேகமாக செல்லும் பகுதிக்குச் செல்ல அவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். கரையிலிருந்த அவர்களது உறவினர்கள் மிகவும் அதிர்ச்சியுடன், கொடுமுடி காவல்நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மீனவர்கள் உதவியுடன் பரிசலில் சென்று தண்ணீரில் முழ்கிய சகோதரர்களைத் தேடினர்.
சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றின் பாறைக்கடியில் சிக்கியிருந்த இரட்டையர்களது சடலங்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கொடுமுடி காவல்துறையினர், உடல்களை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.