ஈரோடு:நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலையைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அமமுக சார்பில்ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான, நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக களப்பணியாற்றிட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, டிடிவி தினகரன் பேசுகையில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக நல்ல கூட்டணியில் இடம் பெறும். பாரத பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அமமுக சிறப்பாகச் செயல்படும். கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது கூறினால் அது நாகரிகமாக இருக்காது. மதுரையில், எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் தான் தவந்து, தவந்து தான் பதவிக்கு வந்தேன் என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார்.
வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு செய்தது எடப்பாடி பழனிசாமி செய்த சதி. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் இட ஒதுக்கீடு செய்ய முடியும் எனத் தெரிந்தும், தான் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்தார்.
சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேடமெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றாகவே தெரியும். வரும் தேர்தலில் அவர்கள் எடப்பாடிக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்.