ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், யானைகள் நடமாடும் இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பழங்குயிடினர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே, சாலையில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் காளிதிம்பத்தைச் சேர்ந்த வனக்குழுவினர் ஈடுபட்டனர். இப்பணியில், 10 பெண்கள் உட்பட 30 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குழுக்களாகவும், தனிமையிலும் வேலை பார்த்து வந்தனர்.
அதில், மணி என்ற தொழிலாளி முட்புதர்களை அகற்றும் பணிகளைத் தனிமையில் மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை பணியில் ஈடுபட்டிருந்த மணியைத் துரத்தியுள்ளது. இதில், யானையிடமிருந்த தப்பிக்க முயன்ற நிலையில், மணியை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த மணியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, யானை தாக்கி உயிரிழந்ததில், முதற்கட்ட நிதியுதவியாக மணி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பணிகள் மேற்கொள்ளும் அடர்ந்த காட்டுப்பகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ளதால் பணி பாதுகாப்பு இல்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, வரும் காலத்தில் யானைகள் நடமாடும் பணியிடத்தில், துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பழங்குயிடினர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாகக் காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. முன்னதாக, சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யானை தாக்கி உயிரிழப்புகள் நேர்ந்து வருவதால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:மின்சாரம் தாக்கிய நண்பனைக் காப்பாற்றச் சென்ற அண்ணன் தம்பி பலி..! தாய், நண்பனுக்கு தீவிர சிகிச்சை..