ஈரோடு: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 08) போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து "அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்" என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.