காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்; போக்குவரத்து பாதிப்பு ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட புளியங்கோம்பை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பினை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த வாரங்களாக புளியங்கோம்பை பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் இவர்கள் அங்குள்ள ஓடை நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர்.
சீரான குடிநீர் விநியோகம் கேட்டு சத்தியமங்கலம் நகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை குடிநீர் விநியோகம் செய்து தரப்படாமல் காலம்தாழ்த்தப்படுவதால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சத்தியமங்கலம் அத்தாணி வாரச்சந்தை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணிநேரம் நடந்த மறியல் போராட்டம் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள், வாகனங்கள் அணிவகுத்து வரிசையான நின்றன. அங்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பழுதடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து நகராட்சித்தலைவர் ஆர்.ஜானகி ராமசாமியிடம் கேட்டபோது, புளியங்கோம்பையில் கீழூர், மேழூர் என இரு பகுதிகளில் ஒரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:குரூப் 1 தேர்விற்கு தயாராகிறீர்களா..? உங்களுக்கான ஹேப்பி நியூஸ்..!