ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி, ஆசனூர் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றையானை வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அங்கு சாகுபடி செய்த வாழை, மக்காச்சோளம் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. யானை விவசாய நிலங்களுக்குள் புகாதபடி இரவு நேரக் காவலுக்குச் செல்லும் விவசாயிகளை ஒற்றையானை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் ஒற்றையானையை பிடித்து அடர்ந்த வனத்தில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து வந்த ராமு, சின்னத்தம்பி கும்கி யானைகளை ஒற்றையானை வரும் வழித்தடத்தில் தினந்தோறும் நிறுத்தி கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கும்கி யானைகள் ஆசனூர் சாலையில் நடந்து வரும் போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கும்கி யானை முன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.