சுங்கக் கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிருப்தி! - சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
ஈரோடு: கரோனா காலத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அனைத்து வகை வாகன ஓட்டிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறை இன்று முதல் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இ-பாஸ் நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் அனைத்து வகை வாகனங்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விடவும் மூன்று மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த மாதந்திரக் கட்டணத்தை உயர்த்தி, அந்தக் கட்டணம் இன்று (செப்டம்பர் 1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கார்களுக்கு கூடுதலாக 5 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு கூடுதலாக 15 ரூபாயும், பேருந்துகளுக்கு 25 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 35 ரூபாயும் உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. ஆனால் தினசரி சுங்கச்சாவடியைக் கடக்கும் அனைத்து வகை வாகனங்களுக்கும் ஏற்கனவே வசூலித்து வரும் பழைய கட்டணமே வசூல் செய்யப்பட்டது.
கரோனா காலத்தில் இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு அனைத்து வகை வாகன ஓட்டிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்கள் அல்லது வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுங்கச்சாவடியைக் கடக்கும் வெளிமாவட்ட வாகனங்களில் பயணிப்போரை பரிசோதித்து அனுப்பிடவும், அனைத்து வாகனங்களின் டயர்கள் மற்றும் வாகனங்களின் மீதும் கிருமிநாசினியை தெளித்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயப்படுத்திட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.