ஈரோடு: போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் நடத்தப்பட்டது.
இதில் சுமூக தீர்வு எட்டப்படாததால், இன்று (ஜன.9) முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனையடுத்து, நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனைக்கு அரசுப் பேருந்துகள் திரும்பியது.
ஈரோடு போக்குவரத்து மண்டலத்தில் 12 போக்குவரத்து பணிமனையில் இருந்து 700க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 4,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பவானி ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு..!
இதன் காரணமாக, சென்னிமலை சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்துகள் வந்து சேர்ந்தது. நேற்று ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்ற போராட்ட அறிவிப்பு துண்டுப் பிரசுரங்களை, அரசுப் பேருந்துகள் முன் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஒட்டி உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், இன்று தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கினாலும், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து இயக்குவதில் எந்த தடங்கலும் ஏற்படாது, சிறப்பு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு" - ஈரோட்டில் பெண்கள் ஆதங்கம்!