ஈரோடு: பர்கூர் வனப்பகுதி, சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலாறு பீட், வாளங்குழி பள்ளம் என்ற இடத்தில் துப்பாக்கியுடன் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் என 9 பேர் அப்பகுதியில் நள்ளிரவில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 5 பேர் அடங்கிய வேட்டை கும்பலைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி தப்பியோட முயன்றதோடு, வனத்துறையினர் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறையினரும் பதிலுக்கு முதலில் தரையை நோக்கி சுட்டு மீண்டும் எச்சரித்தனர்.
தொடர்ந்து வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினர். அப்போது, கோவிந்தபாடியைச் சேர்ந்த குமார் (40) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தப்பி ஓடிய மற்றவர்கள் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா(எ)காரவடையான், காமராஜ், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்து மேட்டூரைச் சேர்ந்த ரவி என்பதும் தெரியவந்தது.