திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகச் சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டின் கடைசி நாளான நேற்று (டிசம்பர் 31) திருப்புகழ் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, அதிகாலை மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டுத் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் அருகில் முதல் திருப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் பஜனைக் குழுவினர் முன்னிலையில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் திருப்புகழ் திருப்படி திருவிழாவைத் தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலர்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
அதே நேரத்தில் பஜனைக் குழுவினர் திருமுருகன் பக்தி பாடல் இசைத்துக் கொண்டு மலைக் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.