தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
சுமார் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரண்டு வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின் 2011ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் 2013ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வனத்துறையின் துரித பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.