ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த காட்சன் பிரிஞ்ச் (15), அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (15) இருவரும் கவுந்தப்பாடி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் காட்சன் பிரிஞ்ச், ஹரி கிருஷ்ணன் மற்றும் இவர்களது நண்பர்கள் நான்கு பேருடன் ஆயிக்கவுண்டனூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காட்சன் பிரிஞ்ச், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தடுப்பணையில் மூழ்கினர்.
அதைத்தொடர்ந்து மற்ற மாணவர்கள் சத்தமிடவே அருகிலிருந்தவர்கள் வந்து தண்ணீரில் மூழ்கிய இருவரையும் மீட்டபோது இருவருமே உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பினர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பழைய சூரி பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (35) சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், யாழனி (9) என்ற மகளும், தேவபிரசாந்த் (7) என்ற மகனும் உள்ளனர். யாழினி புது சூரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பும், தேவபிரசாந்த் அதே பள்ளியில் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கதிர்வேல், மகள் யாழினி, மகன் தேவபிரசாந்த்துடன் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்காளிபாளையம் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மூன்று பேரும் 10 அடி ஆழமுள்ள குளத்தில் மீன் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.