கோவை மத்திய சிறையில் 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் வழக்கில் தொடர்புடைய ஆண்டியப்பன், பெருமாள் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் வி.பி.குணசேகரன் பேசுகையில், ’32 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த இருவரையும் தமிழ்நாடு அரசு விடுவித்து இருக்கிறது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கர்நாடக சிறையிலும் இதேபோல் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள மீசை மாதையன் மற்றும் ஞானபிரகாசம் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். இதில் ஞானப்பிரகாசம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடம் பேசி கருணை மற்றும் நன்னடத்தை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டு சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும். இஸ்லாமிய சிறைவாசிகளையும் மனித உரிமை மற்றும் நன்னடத்தை அடிப்படையில் இஸ்லாமியர் என்ற பாகுபாடில்லாமல் விடுவிக்க வேண்டும்.
வீரப்பன் தேடுதலுக்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 1996இல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டோம். கூட்டு அதிரடிப்படை சட்டத்திற்கு புறம்பாக சட்ட விரோத முகாம்களில் அடைத்து வைத்து 144 தடை உத்தரவையே பல வருடங்களுக்கு நீட்டித்து கடுமையான சித்ரவதை செய்தனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைத்த சதாசிவம் குழு இதனை அறிக்கையில் வெளியிட்டது. அந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து அறிக்கை கொடுத்தார்கள். அதிரடிப்படையின் நடவடிக்கை சட்டவிரோதமாக இருக்கிறது.
சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் இதில் பலர் இன்று மனநலம் பாதித்து நடமாடி வருகின்றனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. விசாரணைக்குழு சதாசிவம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற 89 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. மற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசிடம் ஏற்கெனவே வழங்கி உள்ளோம். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: பள்ளி வாகனத்தில் சிக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!