நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ளதால், அதனைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டும்.
திருமணம், துக்க நிகழ்ச்சி, அவசர கால மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதைப்போன்று ஈரோடு மாவட்டத்திலும் இ-பாஸ் முறையில் பலர் விண்ணப்பித்து வெளி மாவட்டத்திற்கும், வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பவானியில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் போலி ஆவணங்கள் தயாரித்து இருப்பது, அலுவலர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள குறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வேன் ஓட்டுநருக்கு தூத்துக்குடியில் பெண் பார்த்து முடிவு செய்துள்ளனர். கரோனா ஊரடங்கால் இ-பாஸ் எடுக்க, அந்த வேன் ஓட்டுநர் தனது நண்பருடன் பவானி பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டர் உரிமையாளரை அணுகி உள்ளார். அவரும் வேன் ஓட்டுநர் பெயரில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வேன் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அலுவலர்கள் அந்த வேன் ஓட்டுநரின் பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
எப்போது தனக்கு இ-பாஸ் கிடைக்கும் என்று அந்த ஓட்டுநர் கேட்டுள்ளார். அதற்கு பேசிய அலுவலர்கள், நீங்கள் செய்த தவறுக்கு பாஸ் கிடைக்காது சிறை தண்டனைதான் கிடைக்கும் எனக் கூறி, தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த அந்த ஓட்டுநரை, மீண்டும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-பாஸ் பிரிவில் நேரில் சென்று ஆஜராக வேண்டும் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது குடும்பத்தினருடன் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது இன்டர்நெட் உரிமையாளர் பெண் பார்ப்பதற்கு இ-பாஸ் கேட்டால் கிடைக்காது என்பதால், அந்த ஓட்டுநருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடப்பதாக போலியாகத் திருமண பத்திரிக்கை தயாரித்து விண்ணப்பித்து இணைத்து இருப்பது தெரியவந்தது.