ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மூன்றாவது சனிக்கிழமையான நேற்று(அக்-8) நடந்த புரட்டாசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 7 மலைகளைக் கடந்து தரிசனம் செய்ய இங்கு வருவதே இதன் சிறப்பாகும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பகல் என இரு நாள் விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் சத்தியமங்கலம், மைசூர், சாம்ராஜ்நகர், கோபி, புன்செய் புளியம்பட்டி, கடம்பூர், அந்தியூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரதம் இருந்து காலணி இன்றி அடர்ந்த 7 மலைக்குன்றுகளை கடந்து கோயிலுக்குச்சென்றனர். இக்கோயிலில் நரசிம்ம பெருமாளுக்கு 19 அடி உயரம் கொண்ட கருடக்கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.