கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதையடுத்து பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பிவைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் மலைப் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதற்கட்டமாக பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட பாடப்புத்தகங்களை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தந்தப் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்கள் பாடம் வாரியாக எண்ணிக்கை அடிப்படையில் இறக்கிவைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின் பள்ளியில் உள்ள இருப்பு அறையில் அடுக்கி வைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
முழுமையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் சென்று சேர்ந்த பின் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்குமாறு உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.