ஈரோடு:பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 891 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளவும் கொண்டதாகும்.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,642 கன அடி ஆக இருந்த நிலையில் இன்று(ஜூலை14) காலை 16,891 கன அடியாக அதிகரித்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 ந் தேதி 83 அடியாக இருந்த நிலையில் இன்று 90.38 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 21.8 டி.எம்.சி. யாக உள்ளது.
அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!