பொருளாதார கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத போக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். வங்கி மற்றும் தபால் ஊழியர்கள் பெரும்பான்மையானோர் பணியைப் புறக்கணித்ததால் தினசரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தத்தால் ஈரோட்டில் பாதிப்பு இல்லை! - nationwide trade union strike
ஈரோட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கைன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டன. மற்ற பேருந்துகள் அதிமுகவைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்களைக் கொண்டு வழக்கம்போல இயக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஆட்டோக்களும் வழக்கம்போல ஓடின. ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்துள்ளதால் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.