ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர், அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி(36) என்ற மனைவியும், 14 வயதில் மகனும், 12 வயது மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் சரிவர படிக்காத தனது மகனை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள விடுதியிலும் சேர்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த தனது மகனை அவரது தாய், தந்தை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்செல்வன் தனது வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதால் வீட்டில் யுவராணி, அவரது மகன், மகள் மூன்று பேரும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மகன் தாய் மீது இருந்த ஆத்திரத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோபிளாக் கல்லை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலைமீது போட்டதில், பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது அவரது மகள் சத்தம் போடவே,மகன் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானான். இது குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.