தனியார் மின்சாதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. முறையாக புகார் அளித்தும் அதிக அளவில் பணமோ, பொருள்களோ கொள்ளை போகாததால் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை பிடிக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் பொன் நாராயணன். கடந்த 28 வருடமாக ஈரோட்டில் தாமிரபரணி எலட்ரானிக்ஸ் என்ற பெயரில் மின்சாதன பொருள்கள் விற்பனை மற்றும் மாதத்தவணை திட்டத்தில் விற்பனை செய்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில் இந்த வருடம் மட்டும் மூன்று முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த இரண்டு முறை நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மட்டுமே கொள்ளை போனதால், முறையாக புகார் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை மட்டுமே சேகரித்து சென்றதுடன் வழக்குப் பதிவும் செய்யவில்லை, குற்றவாளிகளையும் இதுவரை பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 17) கடைக்கு வந்த உரிமையாளர், கடையில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வடக்கு காவல்துறையினர், அதிகமாக பணமோ, பொருள்களோ கொள்ளை போகாததால் பெயர் அளவிற்கு சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றதுடன் நிறுவனத்தின் உரிமையாளர் சிசிடிவி கேமிரா ஆதாரங்களை கொடுத்தும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.