ஈரோட்டில் கால்நடை அலங்காரப் பொருட்களின் விற்பனை அமோகம்! ஈரோடு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் ஆண்டு முழுவதும் விவசாயத்துக்குப் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்து அவற்றின் கழுத்தில் புதிய கயிறுகள் மற்றும் மணிகள் கட்டுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கால்நடை அலங்கார கயிறுகள் கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. குறிப்பாக இன்று அதிகளவில் அலங்கார கயிறுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டூர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் தயார் செய்யப்பட்ட அலங்கார கயிறுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அலங்கார கயிறு விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இன்று கால்நடைகளுக்கு புதிய கயிறுகள் வாங்க விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக அலங்கார கயிறுகள் விற்பனை களை கட்டியது. தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.80, கழுத்துக்கயிறு ரூ.30, மூக்கணாங்கயிறு ரூ.60, தாம்புக்கயிறு ரூ.20, கொம்புகயிறு ரூ.20, சங்கு கயிறு ரூ.40க்கும் விற்கப்பட்டது. இதுதவிர ஆடு, மாடுகளுக்கு பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட திருகாணி, ஆட்டு மணி, வளையல் மற்றும் சலங்கை என கால்நடைகளுக்குத் தேவையான அனைத்தும் விற்கப்பட்டன.
இதையும் படிங்க: விமானத்தில் கடத்தவிருந்த ரூ.25 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்!