ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கவுந்தப்பாடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு புறநகர் மாவட்ட கழகம் சார்பாக 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள், பெண்கள், ஆண்கள் இளையோர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் நாளாக நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் வந்தார். இதையடுத்து, இந்த கபாடி போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வீராங்கனைகளை வரவேற்றார்.
இதில், அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோலோ இந்தியா பிரிவு கபாடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த யாலினியை (18) பாராட்டி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். பின்பு, ஆடுகளத்திற்குப் பூஜைகள், தீபாராதனை காண்பித்த அமைச்சர் போட்டிகளை தொடங்கி வைத்தார்.