தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமி சிலைகளை உடைத்தெறிந்த முகமூடி கும்பல்: சிவகிரியில் பரபரப்பு - Eerode sivagiri temple

ஈரோடு: சிவகிரி அருகே தொப்பம்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்த சாமி சிலைகளை அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த கும்பல் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sivagiri

By

Published : Oct 21, 2019, 12:19 PM IST

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வரலாற்று நினைவாக ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த கூரக்காளியண்ணன், இளைய காளியண்ணன் என்பவர்களது முழு உருவச்சிலை இருந்து வருகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக இவர்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகளை அமைப்பதற்கு இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் சாலை விரிவாக்கப் பணி காரணமாக, தொப்பம்பாளையம் பகுதியில் இருந்த இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டு சாலையின் உட்புறமாக நிறுவி மேற்கூரை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலைகளை புதுப்பித்து கட்டக்கூடாது என்று மற்றொரு சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனாலும் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து வழபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு காளியண்ணன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முகமூடி அணிந்துவந்த 7க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு சிலைகளையும் கடப்பாறை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அடித்து உடைத்தெறிந்தனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கினர்.

சாமி சிலைகளை உடைத்த முகமூடி கும்பல்

இதனைத்தொடர்ந்து சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சிலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமுதாயத்தினர் தான் சிலைகள் உடைப்புக்கு பின் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிலை உடைக்கப்பட்ட இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...

முகநூலில் பதிவிட்ட கைபேசி எண்: பெண்ணை மிரட்டி தங்கநகை அபகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details