ஈரோடு:சக்தி நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை வைத்து பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்தம் பெற்று சரக்குகளை ஏற்றி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் மதுபானக் கிடங்குகளில் இருந்து மதுபான பாட்டில்களை பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
சச்சிதானந்தம் மட்டுமே மாநில அளவில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் ,வருமான வரித்துறையினர் ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவரது செங்கோடம்பாளையம் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வந்தனர். திருச்சி மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (மே 29) நான்காவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.
சச்சிதானந்தம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செய்து உள்ள முதலீடுகள், வெளி மாநிலங்களில் அவர் செய்து உள்ள முதலீடுகள், லாரி தொழில் தவிர்த்து வேறு ஏதேனும் தொழில் செய்கின்றாரா, அதில் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.