ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு கடந்த மாதம் ஜான் சேவியர் என்பவர் பணி மாறுதலாகி வந்துள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு, சரிவர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்காமல் இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியதுடன், இன்று மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியரை பள்ளிக்கு உள்ளே விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் திரும்பிச் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், தேவகி, மற்றும் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு பள்ளியில் மது அருந்திவிட்டு பணியாற்றாத தலைமை ஆசிரியர் - பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்! அப்போது பள்ளி வளாகத்தில் ஜான் சேவியர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை வீசி சென்றதை, பெற்றோர்கள் அலுவலர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். பின்னர், “தலைமையாசிரியர் ஜான் சேவியர், இந்த பள்ளிக்கு வந்தபின் 17 மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்று விட்டனர்.
பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு, கல்வி கற்பிக்காமல் அலட்சியமாக உள்ள தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக உயர் அலுவலர்களிடம் பேசி, தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எழுதியதாக வைரலாகும் கடிதம்!