ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள நஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வேலுமணி. இவரது 13 வயதுடைய மகள், பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் இணைய வழி கல்வியை சிறுமி கற்றுவந்தார்.
இந்நிலையில், செல்போனில் அடிக்கடி சிறுமி விளையாடியபடி இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால், மனவேதனையிலிருந்த சிறுமி, அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பின்னர் வீட்டிலிருந்து புகை வெளியேவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி உடல் முழுதும் எரிந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.