ஈரோடு:சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறமாக கேமரா பொருத்தி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா என மாவட்ட அளவிலான பாதுகாப்பு கமிட்டியினர் இன்று 126 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட் ரமணி தலைவராகவும் துணை காவல் கண்காணிப்பாளர் அஜ்மல் ஜமால், வட்டார கல்வி அலுவலர் தேவகி, மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட புதிய கமிட்டியினரால் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் இன்று சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 29 பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 166 பள்ளி வேன், பேருந்துகளை ஆய்வு செய்தனர். இந்தாண்டு புதியதாக பள்ளி வாகனங்களில் முகப்பு மற்றும் பின்புறமாக ஜிபிஆர்எஸ் சென்சார் கருவியுடன் தனித்தனி கேமராவும் வாகனத்தின் உள்ளேயும் கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுநர் அருகே டிஜிட்டர் திரையில் ஓட்டுநரை கண்காணிக்கும் படி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனம் பின்பறம் இயக்கும்போது பின்புறமாக குழந்தைகள் நின்றிருந்தால் பீப் ஒலியுடன் அலர்ட் ஒலி எழுப்படும் வசதிகளையும் முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதுஎன உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் உள்புறம் ஓட்டை ஏதும் உள்ளதா என்றும் அவசர கால கதவுகள் துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் உள்ளதையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் வேகக் கட்டுபாட்டு கருவி, பள்ளி குழந்தைகள் புத்தகபை வைக்க இடம், தீயணைப்பு கருவி போன்ற அடிப்படை வசதிகளையும் கமிட்டியினர் ஆய்வு செய்தனர். இந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.