ஈரோடு அடுத்துள்ள கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜிப்ரி, நெகிழி மொத்த வியாபாரத் தொழில் செய்துவருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தொழில் தொடர்பான கண்காட்சிக்கு விமானம் மூலமாக சென்று பின்னர் ஈரோடு திரும்பியுள்ளார். விமானத்தில் சென்று திரும்பிய நாள் முதல் அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல், இருமல், மூட்டுவலி, தலைவலி இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் ஜிப்ரி பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனோ சிறப்பு வார்டில் தன்னைப் பரிசோதனை செய்யும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் ஜிப்ரியை பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பிய மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல்தான் என்று கூறி மூன்று நாள்களுக்குப் பின்னர் வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதன்பின்னர் ஜிப்ரிக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல், மூட்டுவலி, தலைவலி இருந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த ஜிப்ரி தொழில் நிமித்தமாகக் கோவை சென்றபோது கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிறப்பு வார்டில் பரிசோதனை செய்ய சென்றபோது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மட்டும்தான் சிகிச்சையளிக்க உத்தரவு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜிப்ரியின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்பு ரத்தம் மாதிரியை பரிசோதனை எடுக்க அனுமதியளித்துள்ளனர். ஆனால் ரத்த மாதிரியை எடுக்கவந்த மருத்துவமனை செவிலியர் போதிய மருத்துவ உபகரணங்கள்கூட இல்லாமல் எடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜிப்ரி தனக்கு கொரோனோவாக இருந்தால் இப்படித்தான் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுப்பீர்களா என்று மருத்துவமனை செவிலியரிடம் கேட்டுள்ளார்.