ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் மூன்றாவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டுக்கான விழா இன்று (நவம்பர் 17) காலையில் சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணமும் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்துவைக்கப்பட்டது.
இந்தத் திருவிழா குறித்து மக்கள் கூறியதாவது, "சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணம் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார்.
இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பைமேட்டின் மீதேறிச்செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது.
அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து மூதாதையர் வழிகாட்டுதல்படி இந்த விழாவை கொண்டாடிவருகிறோம்" எனத் தெரிவித்துள்னர்.