ஈரோடு:ஈரோடு கால்நடை மருத்துவமனை அருகே, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று (ஜூன்.22) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மத்திய மாவட்டத் தலைவர் சிந்தனைச்செல்வன் தலைமை தாங்கினார்.
தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட துணைச் செயலர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நிவாரணம்
உயிரிழந்த திருநாவுக்கரசின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சாதிய கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தடையை மீறி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி நிர்வாகி கொலை
தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட துணைச் செயலராக இருந்த திருநாவுக்கரசு, ஆங்கூர்பாளையம் சாலை டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டண கழிப்பிடத்தை நிர்வகித்து வந்தார்.
இவர், அந்த கழிப்பிடம் அருகே அண்மையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இது குறித்து கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து, டி.டி.வி. தினகரன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (21), கார்த்திக் (20) ஆகியோரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்