கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தபாடியில் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பணன், "தமிழ்நாட்டில் கரோனா பிரச்னை காரணமாக சாயச் சலவை ஆலைகளுக்கான பொதுச் சுத்தகரிப்பு மையம் அமைப்பதில் கால தாமதமாகிவருகிறது.
இந்தியா முழுவதும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் வீட்டிலிருந்து படித்துவரும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சாயச் சலவை ஆலைகளுக்கான பொதுச் சுத்திகரிப்பு மையம் அமைப்பது தள்ளிப்போயுள்ளது. இதற்கான கோப்புகள் தயாராக உள்ளதால், விரைவில் மத்திய அரசிடம் நிதி பெற்று இதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றார்.
அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர் சந்திப்பு மேலும், பொதுமக்கள் அணியும் முகக்கவசங்கள் அனைத்தும் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் சேகரித்து முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது என்றும், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: தமிழர்களின் கைவண்ணத்தில் உருவாகும் தெலங்கானா தலைமை செயலகம்!