தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட வன கிராமங்கள் உள்ளன. தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தமிழில் வரவேற்பு பெயர் பலகை, மாநில எல்லை ஆரம்பம் போன்ற வரவேற்பு பலகை உள்ளது.
சில இடங்களில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இரு மாநில எல்லையான ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்ட தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வரவேற்பு பலகை, தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகியவற்றில் இருந்த தமிழ் பெயர்களை கன்னட சலுவாலியா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அவரது கட்சியினர் கிழித்து, சேதப்படுத்தி கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
இதை அங்கு வேலை செய்து கொண்டிருந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பார்த்து தாளவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தாளவாடி காவல்துறையினர் சேதமடைந்த பெயர் பலகைகளை ஆய்வு செய்தனர்.
வரவேற்பு பலகையை சேதப்படுத்திய கன்னட சலுவாலியா கட்சியினர் பதட்டமான சூழ்நிலையில் தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினர் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இரு மாநில எல்லை வழியாக செல்லும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ், கன்னட மொழிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும், தமிழில் மட்டுமே வைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் பொறிக்கப்பட்ட அரசு பெயர் பலகைகளை வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க... பெயர்ப் பலகை கறுப்பு வண்ணம் பூசி அழிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்