காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேகதாது பகுதியில் நேற்று (மார்ச்.28) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் மேகதாதுவில் இன்று முற்றுகை போராட்டம் இதற்காக, தமிழநாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கர்நாடக மாநிலம் நோக்கி நேற்று புறப்பட்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து 17 வாகனங்களில் 250 விவசாயிகள் சத்தியமங்கலத்துக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வார சந்தையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்களை கோம்பு பள்ளம் என்ற இடத்தில் சத்தியமங்கலம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதற்கு மேல் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அங்கேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை கட்டினால் விவசாயி உயிர் எடுக்க நேரிடும் என்பதை சித்தரித்து ஒருவரை படுக்கவைத்து, ஒப்பாரி பாட்டுப் பாடி போராட்டத்தில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஊர்வலத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விடுத்துள்ளதை அடுத்து, காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கர்நாடக அரசின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். இந்நிலையில், சத்தியமங்கலத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அனில் தேஷ்முக் மீது புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை