ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கால்கோள் போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர் ஈஸ்வரன் கலந்து கொண்டு கால்கோள் நாட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஆர் ஈஸ்வரன், “கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் பல வருடப் பிரச்சனைகள் தொழில் வளர்ச்சி மற்றும் அவற்றின் மீதான கோரிக்கை உள்ளிட்டவற்றை உள்ளடக்கி இந்த மாநாடு நடைபெறுவதாகக் கூறினார்.
இந்த மாநாட்டையொட்டி வள்ளி கும்மியாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஆயிரம் பேர் பங்கேற்கக்கூடிய வள்ளி கும்மியாட்ட உலக சாதனை நிகழ்த்தப்பட இருப்பதாகக் கூறிய ஈஸ்வரன்,
வள்ளி கும்மியாட்டம் மூலம் பெண் குழந்தைகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.