இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா என்ற கொடிய வைரஸ் தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் தொடங்கி தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் பரவி மக்களின் வாழ்வாதாரங்களை முடங்கசெய்வதோடு மட்டுமல்லாமல், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை வீட்டிற்குள் முடங்க செய்துள்ளது.
ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் துவங்கி மே மாதத்திற்குள் பருவத் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து, மே இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் தேர்ச்சிகள் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வேலைக்குச் செல்வதற்கும், உயர்கல்வி படிப்பதற்கும் அல்லது அடுத்த ஆண்டு படிப்பதற்கும் தேர்ச்சி பயன்பட்டு வந்தது.
ஆனால் தற்போது மார்ச் மாத முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். என்ன செய்வது என்று அவர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். வேலைக்கு செல்வதா ? உயர்கல்வி படிப்பதா ? அல்லது இந்த ஆண்டு பருவத்தேர்வு நடக்குமா? நடக்கவில்லை என்றால் மதிப்பெண் எப்படி கொடுப்பார்கள் நம் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதைப் போக்கும் விதமாக மாணவர்களின் நலனிலும், படிப்பிலும் அதிக அக்கறை கொண்ட முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்பட்டதோ, அதேபோல கடந்த பருவத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது அந்தந்த கல்லூரிகளில் நடத்திய யூனிட் தேர்வு மதிப்பெண்ணை வைத்து மாணவர்களுக்கு தேர்ச்சியை கொடுத்து அவர்கள் வேலைக்குச் செல்வதற்கும், உயர்கல்வி படிப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!