ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வல்லரசம்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் விஜயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், 'சட்டமன்ற இடைத்தேர்தலில் தமாகா போட்டியிட்ட தொகுதி என்பதால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜி.கே. வாசன் கூட்டணித் தலைவர்களுடன் பேசி, ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகா-ற்கு ஒதுக்க வேண்டும். அப்படி அறிவிக்கிற வேட்பாளரின் வெற்றிக்குப் பணியாற்றுவோம். தமாகா கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டப் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதற்கு மாறாக வீட்டு வரி, சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளது. இவற்றை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து இடைத்தேர்தலில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறோம். திராவிட மாடல் எனக்கூறி தனது மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுப்பதில் திமுக குறியாக இருந்துள்ளது. இதுதான் திராவிட மாடலா..? தமிழ்நாடா தமிழகமா என்பது பெரிதல்ல.. மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுகின்றனர். உங்களுக்கு ஒன்றிய அரசு என்று சொன்னால் இனிக்கிறது. நாங்கள் தமிழகம் என்று சொன்னால் கசக்கிறதா.