தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலையொட்டி இஸ்லாமியர்கள் வழிபடும் பெரிய பள்ளிவாசல் உள்ளது. பள்ளி வாசல் முன் குண்டம் வார்க்கப்பட்டு தீ மிதி நிகழ்வு நடைபெறுவது வழக்கம். பழமையான இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக ராஜகோபுரம், விமான கோபுரத்தின் திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இன்று மதியம் யாக சாலையிலிருந்து புனித நீர் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினர். அதனைத் தொடர்ந்து ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.