ஈரோடு: ஈரோடு மாவட்டம், மேட்டுக்கடை அடுத்த கதிரம்பட்டியில் செயல்பட்டு வரும் 3826 என்ற எண்ணில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டியில், 'முதலில் எந்த துறையாக இருந்தாலும் அதில் பணி செய்பவர்களுக்குச் சரியான பாதுகாப்பு சூழல் இருக்க வேண்டும். அந்த வகையில், நேற்று முன்தினம் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினோம். பணியாளர்களிடம் என்னென்ன பிரச்னை உள்ளது என்பது குறித்தும் அதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர்களிடமே கேட்டு கலந்து உரையாடினோம். பல இடங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு ஒரு பிரச்னையாக இருக்கிறது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போதிய இடங்கள் இல்லை. முக்கியமாகப் பிரதான சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. அதன் காரணத்தால் கடைகளுக்குக் கூட்டம் வருகிற போது பொதுமக்களுக்கு அது இடையூறாகவும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து மூன்று கடைகளைத் தேர்ந்தெடுத்து தடுப்புகள் அமைத்துக்கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
இதையும் படிங்க:CM Breakfast Scheme: முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட உணவு பட்டியல் மாற்றம்!
இதில் தவறான விற்பனை வரக்கூடாது என்பது தான் முதலமைச்சரின் எண்ணமே தவிர, அதிகமாக விற்பனை செய்து அரசிற்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அல்ல. அதுமட்டுமில்லாமல் தவறான விற்பனை எங்கே நடக்கிறது என்பதையும், அதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.