ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏரில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் மின்வாரியத்துறையின் சார்பில் புதிய துணைமின் நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஏரி, குளங்ளை தூர்வாரவேண்டும் என்ற கருத்துக்களை வழங்கியுள்ளார். கடந்தாண்டை விட இந்தாண்டு குடிமராமத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
தடையில்லா மின்சாரம் மட்டுமல்ல குறைந்தழுத்து மின் விநியோகம் இல்லாமலும் விநியோகிக்கப்படுகிறது. இந்தியாவில் நோய்யற்ற வாழ்வை வாழ சுற்றுச்சூழல்துறையில் நெகிழி பைகளை ஒழித்து இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது"
மேலும் பேசிய அவர், "டி.ஆர்.பியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு தேர்வுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும். அதற்கு பிறகு பாலிடெக்னிக் பேராசிரியர் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தவறும் நடைபெறக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்" என ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி