ஈரோட்டில் இரண்டாயிரம் கோடி ரூபாய் பிட்காயின் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள சுபாஷ் சாமிநாதன் தங்களது அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அகில பாரத இந்து மகா சபையினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் மாநில தலைவர் கல்கி ராஜசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கே.எஸ். குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சுபாஷ் சாமிநாதன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அறக்கட்டளை என்ற பெயரில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
இவர் தன்னைத் தானே அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் என்று அறிவித்துக்கொண்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கோபியில் ரூ.2000 கோடி பிட்காயின் மோசடி விவகாரத்தில் மூளையாக சுபாஷ் சாமிநாதன்தான் செயல்பட்டு வருகிறார்.