ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களின் எல்லையான தாளவாடியை அடுத்து கொங்கஹள்ளி என்ற வனம் உள்ளது. இங்கு மூன்று மலைகளுக்கு நடுவே பாறைக் குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சுவாமி கோயில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இக்கோயிலில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் திருக்குண்டம் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
நேற்று மாலை ருத்திராபிஷேக பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத் தோப்பிலிருந்து மேள தாளத்துடன் சுவாமி ஆபரணங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இக்கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால், பெண்கள் 2 கி.மீ. தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாறைக் குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன.