தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடக்கழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக திகழும் பேரூராட்சி - செயல் அலுவலரின் வியப்பூட்டும் முயற்சி! - Kodumudi corporation solid waste management

கோயில் நகரமான கொடுமுடியை குப்பைகளற்ற பகுதியாகவும், பிளாஸ்டிக் கழிவுகளற்ற பகுதியாக மாற்றியதுடன், குப்பைகளை பிரித்து மண் புழு உரம் தயாரித்தல், சாலையோரத்தில் மரங்களை நட்டு வளர்த்தல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், பேரூராட்சி செயல் அலுவலர். இந்த நம்பிக்கை முயற்சியால் கொடுமுடியை திடக்கழிவு மேலாண்மையில் முன்மாதிரியாகவும் மாற்றியுள்ளார்.

Solid Waste Management Kodumudi municipality
கொடுமுடி பேரூராட்சி

By

Published : Oct 27, 2020, 7:50 PM IST

Updated : Oct 28, 2020, 8:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீடுகளில், சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மட்கும் குப்பை | மட்காத குப்பை என முறையாக பிரிக்கப்படுகிறது.

அந்தந்த ஊர்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை அப்படியே அப்புறப்படுத்தாமல் உரமாக தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அனைத்து நிர்வாகங்களும் இதைச் செய்கிறதா ? என்றால் கேள்விக்குறிதான். இந்நிலையில், கொடுமுடி பேரூராட்சி, மட்காத குப்பைகளை மறுசுழற்றி செய்வதோடு, மட்கும் குப்பைகளை உரமாக மாற்றி அசத்தி வருகிறது.

மண்புழு உரம்

கொடுமுடி?

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தான் பிரசித்திப் பெற்ற மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற முக்கிய அமாவாசைகளில் திதி கொடுப்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர் கூடி தங்களது முன்னோருக்கான காரியங்களை மேற்கொள்வது வழக்கம்.

இப்படி, கோயில்களும், பக்தர்களும் மட்டுமல்ல குப்பைகளும் நிறைந்து காணப்படும் பகுதிதான், கொடுமுடி பேரூராட்சி. இருப்பினும் தற்போது வரை தமிழ்நாடு அளவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் பேரூராட்சியாக விளங்கி வருகிறது.

கொடுமுடி பேரூராட்சி பற்றி...

குப்பைகளை சிறந்த முறையில் தரம் பிரித்து சுகாதாரத்தை சிறப்பாக பேணும் கொடுமுடி பேரூராட்சி தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவவர் விஜயநாத்தின் சிறப்பான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அப்பகுதியை முன்மாதிரியான பேரூராட்சியாக மாற்றியுள்ளது.

”தரம் பிரித்த குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் மண்புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் வருவாய் ஈட்டி தன்னை சிறந்த பேரூராட்சியாக நிரூபித்துள்ளது, கொடுமுடி”

இயற்கை உரம்

இங்கு குப்பைகளுடன் சேகரிக்கப்படும் முட்டை ஓடுகளைக் கூட வீணாக்காமல் அதனை அரைத்து பொடியாக்கி வீட்டுத்தோட்டத்திற்கும், மாடித் தோட்டத்திற்கும் பேரூராட்சி நிர்வாகம் விற்பனை செய்கிறது. இந்தப் பேரூராட்சியில் தயாரிக்கப்படும் மண்புழு உரங்களும், இயற்கை உரமும் வெறும் 5 ரூபாய்க்குதான் விற்பனை செய்யப்படுகிறது.

மாதம்தோறும் ஒன்று முதல் 11/2 டன் அளவுக்கு தயாரிக்கப்படும் மண்புழு உரங்கள் அதிகளவில் விற்பனையாவதாகத் தெரிவித்த விஜயநாத், உரம் தயாரிக்கும் பகுதியின் சுகாதாரத்திற்காக 30 வாத்துக்களை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

குப்பைகளில் மேயும் வாத்துக்கள்

அதுமட்டுமல்ல, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாத்து முட்டைகளும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது எனக் கூறி வியக்க வைக்கிறார் விஜயநாத். உரங்கள், வாத்து முட்டைகள் விற்பனை இன்னும் என்னென்ன செயல்பாடுகளைக் கொடுமுடி பேரூராட்சி மேற்கொள்கிறது எனக் கேட்டபோது, இதுவரை பகிர்ந்தவை எல்லாம் மட்கும் குப்பைகளைக் குறித்து தான் மட்காத குப்பைகளுக்கு வேறு சில வழிகள் இருக்கிறது என சில சஸ்பென்ஸுடன் செயல் அலுவலர் விஜயநாத் தொடர்ந்து பேசினார்.

”பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், உலோகங்கள் போன்ற மட்காத குப்பைகளைத் தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கிறோம். அதை விற்று கிடைக்கும் வருமானத்தை குப்பை மேலாண்மையில் உதவியாக இருக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பங்காகக் கொடுக்கிறோம்” என்கிறார் செயல் அலுவலர் விஜயநாத்.

உரங்களால் தாவரங்களுக்கு உயிரூட்டும் கொடும்முடி பேரூராட்சி நிர்வாகம், தற்போது பேரூராட்சி இணை இயக்குநரின் பரிந்துரையின் பேரில் நர்சரியொன்றையும் தன்னுடன் இணைத்துள்ளது. இங்கு மரக்கன்றுகளை உருவாக்கி விற்பனை செய்வதுடன் பேரூராட்சி முழுவதுமுள்ள சாலையோரங்கள், பொது இடங்களில் மரங்கள் நடப்பட்டு பராமரித்தும் வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

நர்சரி

கோயில் நகரமாக இருப்பதால் குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. நாளடைவில் குப்பைகளற்ற, பிளாஸ்டிக் அற்ற பேரூராட்சியாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பூரிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத்தின் இந்த செயல் பிற மாவட்டங்களின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

திடக்கழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக திகழும் பேரூராட்சி

இதையும் படிங்க:மீண்டும் தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக மாறும் தரங்கம்பாடி’ - சூளுரைக்கும் பேரூராட்சி நிர்வாகத்தினர்!

Last Updated : Oct 28, 2020, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details