கோபிசெட்டிபாளையத்தில் ஊரடங்கை கடைப்பிடிக்காத மக்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு பல்வேறு பணிகளுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது.
அதன்படி, கோபியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தை உள்ளிட்ட கடைகளுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துவருவதும் வேதனை அளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசியமற்ற பொருள்களை விற்பனைசெய்யும், ஃபேன்ஸி ஸ்டோர்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள், தேநீர் கடைகள் போன்றவற்றை வியாபாரிகள் திறந்துவைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். அக்கடைகளுக்குச் செல்லும் மக்களும் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிவருகின்றனர். இது குறித்து காவல் துறையும், வருவாய்த் துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நாள்தோறும் கடைகளின் திறப்பும் அதிகரித்தவண்ணமே உள்ளது.