கரூர்:பிரதமர் மோடி தாராபுரம் வருகையின்போது கறுப்புக்கொடி காட்ட உள்ளதாக அறிவித்த சமூக ஆர்வலர் முகிலனை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.
அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாராபுரம் வருகிறார். இதையடுத்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கறுப்புக்கொடி காட்டப்போவதாக காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான கரூரில் நேற்று (மார்ச் 29) அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று (மார்ச் 30) காலை 7.30 மணி அளவில் ஈரோடு சென்னிமலை பகுதியில் உள்ள முகிலன் தனது வீட்டிலிருந்து தாராபுரம் செல்வதற்காக கிளம்பினார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது ஏழு தமிழர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து விட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்தும், மேகதாது அணை கட்ட கர்நாடகா பாஜக அரசுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு பல்வேறு உதவிகளை செய்து தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற சமூக ஆர்வலர் முகிலன் குண்டுக்கட்டாக கைது தன்னை கைது செய்வதற்காக காவல்துறையினர் கொண்டு வந்திருந்த வாகனத்தில், முகிலன் சிறிது நேரம் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் காவல்துறையினர் குண்டுக்கட்டாக அவரை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் எல். முருகன் உள்பட 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை!