எலி மான் என அழைக்கப்படும் அரிய வகையான சருகுமானைப் பிடித்து பாம்புபிடி வீரர் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார் ஈரோடு:சென்னிமலை அருகே உள்ள மைலாடி பகுதியில் அரிய வகை எலி மான் ஆபத்தான முறையில் நின்று கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவர், மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றுள்ளார்.
ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதை துளியும் பொருட்படுத்தாமல் யுவராஜை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததன் பெயரில், ஒரு வழியாக வனத்துறையினர் சருகு மானை வாங்கி கூண்டில் அடைத்துள்ளனர்.
தென்னிந்தியா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் இலங்கை போன்ற பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதிகளின் சில பகுதிகளில் அரிய வகையான எலி மான் எனப்படும் சருகுமான் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மைலாடி பகுதியில் பிரபல பாம்புபிடி வீரர் யுவராஜ், பொதுமக்கள் அழைப்பு விடுத்ததன் பேரில் பாம்பு பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் சாலையின் ஓரமாக ஆபத்தான முறையில் மர்ம விலங்கு ஒன்றைப் பார்த்து அருகே சென்று பார்த்த போது, அது அரிய வகையான சருகு மான் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், வனத்துறை அதிகாரிகள் அரிய வகை மானை ஈரோடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அழைத்த அதிகாரிகள், இங்கு வேண்டாம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளோடு சென்ற யுவராஜ், வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்தபோது, சருகு மானை பெற்றுக் கொள்ளாமல் “இதனை ஏன் பிடித்தீர்கள்? இதன் உயிருக்கு ஏதாவது ஆனால் உங்கள் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளனர். இதனையடுத்து யுவராஜ் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியுள்ளார். இதையடுத்து வனத்துறையினர் சருகு மானை வாங்கி கூண்டில் அடைத்து உள்ளனர்.
இதையும் படிங்க:எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் விளக்கம்!