ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் யுவராஜை விட 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த நான்காம் தேதி மாரடைப்பால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று(ஜன.18) தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்தபோது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவித்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வேட்பு மனு தாக்கலும் அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்கு பதிவும்; மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும்; ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் 23 மாற்று பாலினத்தவர்களும் என மொத்தமாக 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.