ஈரோட்டில் கழிவு நீரின் பிடியிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாதுகாக்கப்படுமா ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணை கட்டப்பட்டது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது, பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டிற்கு வந்தடைகிறது.
பின்னர், இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், அக்ரஹாரம், வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடுமுடி என 56 மைல் தூரம் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த காளிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்களில், மஞ்சள், தென்னை, வாழை, நெல், போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் தோல் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாசன நீர் முற்றிலுமாக மாசடைந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று(டிச.13) மரப்பாலம் அருகில் உள்ள காரைவாய்க்கால் பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் சாயத்தண்ணீர், சாக்கடைக் கழிவு உள்ளிட்டவைகள் கலந்து வருவதால், தண்ணீரின் நிறம் மாறியதோடு, அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பாண்டி,“காளிங்கராயன் வாய்க்காலில் உள்ள தண்ணீரானது கடந்த 5 நாட்களாக சாக்கடை கலந்தும், நிறம் மாறியும் வருகின்றது. மேலும், அதிகமாக துர்நாற்றம் வீசுவதோடு, வாய்க்காலில் குளித்தால் உடலில் அரிப்புகள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகின்றது.
இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சீரான, மாசற்ற தண்ணீர் கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும் என ஊர்மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்து உள்ளார்”.
இதையும் படிங்க:தேங்கி நிற்கும் மழை நீரால் வரும் கண் நோய்; இலவச பரிசோதனையை அறிவித்த டாக்டர் அகர்வால் மருத்துவமனை!